கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,
'வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா? (புல. 1:12)" என்று அங்கலாய்த்து, சபை செயல்படாதா? என்று எதிர்பார்த்து நிற்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகள். சபை செயல்படத் துவங்கினால், திறக்கப்படும் கதவுகளுக்குக் கணக்கில்லையே!
யோசுவாவின் காலத்திலேயே சுதந்தரித்திருக்கவேண்டிய வாக்குத்தத்த பூமிக்குள் 'எருசலேம்" சுதந்தரிக்கப்படாமல் இருந்தது. ஏனெனில், யூதாவின் தலைவர்களின் 'அசதி" (யோசு. 18:3). இஸ்ரவேலின் கலப்பு வாழ்க்கை (யோசு. 23:15,16). விளைவு, எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா துரத்திவிடக்கூடாமற்போயிற்று. ஆகையால், அது எபூசியரின் வசத்தில் இருந்தது (யோசு. 15:63). மெல்கிசேதேக் என்னும் இராஜாதான் அப்பகுதிக்கு முந்திய நாட்களில் இராஜா (ஆதி. 14:18-20).
ஆபிரகாம் தன் குமாரனை பலிகொடுக்க தேவனால் குறிக்கப்பட்ட மலையை அடக்கிய இந்த பகுதியை, இப்போது சத்துரு சுதந்தரித்துக்கொண்டிருந்தான் (ஆதி. 22:2,4). பின்னால் தாவீது தன்னுடைய தவறை உணர்ந்து (ஜனங்களை எண்ணிக்கை செய்தது) தேவ கோபத்தினை அமர்த்த [ஏற்கனவே 70000 (எழுபதாயிரம்) கொல்லப்பட்டு வீணாக மரித்துப்போனார்களே! (1 நாளா. 21:14)] பலிசெலுத்தினதும் இதே இடம்தான் (1 நாளா. 21:18). யோசுவா அதின் அதிபதியாயிருந்த அதோனிசேதேக்கின் கையிலிருந்து, சந்திரனையும் சூரியனையும் நிறுத்தி யுத்தம் செய்து பிடித்தது மட்டுமல்லாமல், அவனுடைய கழுத்தின் மேல் உடன் தலைவர்களை கால்களை வைத்து வெற்றியைச் சுகித்த பகுதி (யோசு. 10:1,12,24). ஆனால், இஸ்ரவேலின் 'அசதி" (இன்று சபை இருப்பது போலவே) அதை சத்துருவுக்கு விட்டுக்கொடுத்திருந்தது. கூடவே, அதின் குடிகள் தைரியமாக, குருடரும் சப்பாணிகளும் உங்களைத் தடுப்பார்கள் என்று ஏளனம் செய்யும் அளவுக்கு வளர்ந்திருந்தார்கள் (2 சாமு. 5:6).
சவுலுக்கு இதனைக் குறித்து ஒரு கவலையுமில்லை. அவனுக்கு தேசத்தை சத்துருவின் கையிலிருந்து காப்பது பெரிதாகத் தோன்றவில்லை; மாறாக, தாவீதை அழிக்கவே தன் இராஜ்யபாரத்தின் அனைத்து காரியங்களை முடுக்கிவிட்டிருந்தான். இன்றைய சபைத் தலைவர்களும் இப்படித்தானே நடந்துகொள்ளுகிறார்கள். தன்னை பாதுகாக்க அனைத்தையும் (Resources, people & time) செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள் (1 சாமு. 24:14).
ஆனால், தாவீதோ, ஆபிரகாமையும், மெல்கிசேதேக்கையும் நினைவுகூர்ந்தவனாக, எந்த கேலிப்பேச்சுக்கும், சத்துருவுக்கும் பயப்படாமல், 'ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று" (2 சாமு. 5:7).
அதனைப் பிடிக்க தன் ஜனத்திற்கு முன் ஒரு யுத்த முறைமையையும் (strategy), சவாலையும், வெகுமதியையும் வைக்கிறான் (2 சாமு. 5:8; 1 நாளா. 11:6). தாவீதின் யுத்த முறைமை, சாலகத்தின் வழியாய் ஏறவேண்டும் என்பது (Gutter in KJV). தேவனை நேசிப்பவனுக்கு, சத்துருவை அடையாளம் கண்டுகொண்டவனுக்கு, சிறிய கதவு திறந்தாலும், அழுக்கிலும், நாற்றத்திலும் இறங்க நேரிட்டாலும் கவலையில்லையே!
'எருசலேமின் அலங்கத்தைப் பார்
தெருக்களின் அலங்கோலத்தைப் பார்
நொறுங்கி ஜெபித்து விழுந்து அழுது
திரும்ப அலங்கத்தைக் கட்டிடவா"
என்ற பாடல்களின் வரிகளை என்னுடைய கூட்டங்களில் சகோ. ஒண்டே மோசசை பாடவைத்தது, இதுபோன்ற வைராக்கியமுள்ள வாலிபர்களைத் தட்டி எழுப்பத்தான். இன்றும் வாக்களிக்கப்பட்ட தேசம் சத்துருவின் கைகளில் மாட்டிக்கொண்டுள்ளது. இந்தியாவிலும் கையாலாகாதவர்கள் (குருடர், முடவர் போன்ற வக்கற்ற சக்திகள்) ஆக்கிரமித்து வைத்துள்ள ஜனங்களை மீட்க, யோவாபுகளும், உற்சாகப்படுத்தும் தாவீதுகளும் (தலைவர்கள்) வேண்டுமே. ஆனால், ஆவிக்குரிய தலைமைகளோ, சவுலைப் போன்று 'தன் பாதுகாப்பையே குறியாகக் கொண்டு செயல்படுகிறதே! ஐயோ! தேவனே எங்கள் தலைவர்கள் தாங்கள் செய்யவேண்டியதனைக் குறித்து அசதியாயிருக்கிறார்களே. எரே. 48:10-ல் சொல்லப்பட்டது போன்று, 'கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன். இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்". சாப ஊழியத்தினை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்களோ??
'இடது பக்கத்தில் நிற்பவர்கள் போல, சபிக்கப்பட்டவர்களே என்னை விட்டு பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினிக்குப் போங்கள்" என்று சொல்லிவிடுவாரோ? (மத். 25:41) என்ற அச்சம் எப்போதுமே எனக்கு உண்டு. எரே. 23:1 எசே. 34:2 'மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை" என்று சொல்லிவிடுவாரோ?
'கடைசி வார்த்தை" பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகத்தின் முதுஏ என்ற மொழிபெயர்ப்பில் ('Curse") சாப வார்த்தையோடே முடிகிறது. அந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் மேய்ப்பருக்கே எழுதப்பட்டது அல்லவா (மல். 2:1-8). வார்த்தையை விட்டு விலகின அவர்களின் குறையைச் சுட்டிக்காட்டி, பரிசுத்தக் குலைச்சலையும் சுட்டிக்காட்டி (மல். 2:14-16), சத்துவமற்ற பிரசங்கங்களைக் குறித்தும் (மல். 2:17), காணிக்கைப் பணத்தினை வஞ்சித்து, வேறு காரியத்திற்குச் செலவழித்து வீணடிக்கும் காரியத்திலும் (மல். 3:8,9), கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினால் என்ன பிரயோஜனமென்று ஜனத்தினை திசைதிருப்பும் போதகத்திலும் (உபவாச ஜெபம் தேவையில்லை, ஏன் நீ ஜெபிக்கவே வேண்டாம் என்றும் உபதேசங்கள்) இன்று சபையை நடத்துவோர் பெருகிவருகின்றனர்.
ஆயினும், 'தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும், அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தினை அவர் காண்பிக்கும் நாளிலே அப்படிப்பட்டவர்களை அடையாளம் காட்டிக்கொடுத்துவிடுவார் அல்லவா (மல். 3:17:18).
அமெரிக்க அதிபரின் சில சீர்திருத்த நடவடிக்கையினை (குறிப்பாக தவறான முறையில் தேசத்திற்கு வந்தவர்களைத் திரும்பி அவர்கள் தேசத்திற்கே அனுப்பும், அதுவும் அசிங்கப்படுத்தும் வண்ணம் சங்கிலிகளால் கட்டப்பட்டவர்களாய் அனுப்பும் செயல் போன்றவைகள், மற்ற நாட்டின் தலைவர்களையும் இயக்கிவிடுவதனைக் காணுங்கால் (U.K, Saudi Arabia போன்றவைகள்), அவர் ஜெபத்திற்கும், வேதபுத்தகத்திற்கும் திருப்பும் செயல்கள், 'பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்" என்ற எலியாவின் ஆவியின் பெலத்தில் செயல்படுத்தும் ஒரு மனிதனை தேவன் எழுப்பியுள்ளாரோ?? என்று யோசிக்கவைக்கிறது (மல். 4:5,6).
கூடவே, அமெரிக்காவில் இனி இரண்டு ஜாதி (ஆண், பெண்) என்று முழங்கி LGBTQ+- மூக்கை உடைத்ததும், அதற்கு சாதகமாகப் பேசிய போதகரின் உபதேசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம், சபைக் கட்டிடத்தை விட்டு வெளியேறும் காட்சியும், இராணுவத்தில் ஓரினச் சேர்க்கைக்காரர்களுக்கு இடமில்லை என்று சட்டத்தை இயற்றி, இராணுவத்தையும், செயலற்றுக் கிடக்கும் இலாக்காக்களுடைய அரசாங்கப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவைப்பதில் கவனம் செலுத்துவதையும் காணுங்கால், அதே காரியம் நம் நாட்டிலும் நடக்காதோ!! என்றே ஏங்கவைக்கிறது. யெகூவைப் போன்ற நடவடிக்கைகள் (தேசத்தின் சுத்திகரிப்பு) தீவிரமாக நடைபெறுகிறது. ஓர் எழுப்புதலுக்கு இது உதவிசெய்யும் அல்லவா. ஏனெனில், எந்த எழுப்புதலும் மனஸ்தாபப்பட்டு, மனந்திரும்பி, விட்டுவிட்டு ஜெபிப்பதிலேயே ஆரம்பிக்கிறது அல்லவா!
அமெரிக்காவில் மக்கள் (இளைஞர் உட்பட) ஆங்காங்கே திரளாகக் கூடி ஜெபிக்கும் காட்சி, எழுப்புதல் அந்த தேசத்தில் உண்டாக வாய்ப்புண்டு என்ற புத்துணர்ச்சியை நமக்குள் உண்டாக்குகிறது அல்லவா!
தேவ சேனை ஒன்று எழும்புகிறதே
உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே
என்று நான் எழுதின பாடலுக்கு மெருகு ஏற்றுகிறது.
டிரம்ப் மிரட்டல்கள், காஸாவைக் குறித்தும், உக்கிரைனைக் குறித்தும், இந்தியப் பிரதமரை வாயடைக்கும் வழிகளையும் பார்க்கும்போது, நாடுகள் இனி எப்படி பிரதிநடவடிக்கை எடுக்கும் (Reaction) என்பது நாடுகளை மீண்டும் கலங்கப்பண்ணலாம். அமெரிக்காவை கிறிஸ்தவ தேசமாகவே மற்ற நாடுகள் பார்க்கவேண்டும். முற்பிதாக்கள் போட்ட அஸ்திபாரமாகிய 'We Trust in God" என்ற வாசகமே எங்கும் முழங்கவேண்டும் என்ற விருப்பம் போன்ற அறிக்கைகள் தெய்வீகமானது; நிலைத்திருக்கவேண்டும். 'Back to the Bible" தான் இன்று இந்திய சபைகளுக்கும் தேவை. குப்பைகள் கூடிவிட்டன, குவிந்து நாற்றம் எடுக்கிறது; அகற்றாவிடில் ஆபத்து என்று கூவி அறிவிக்கவேண்டுமே. சபையின் சுத்திகரிப்புதான் தேசத்திற்கு ஷேமத்தைக் கொண்டுவருமென்பது மாறாத பிரமாணம்.
தேசத்தில் கற்பழிப்பு, அவலட்சணமான செயல்கள், சமூக வலைதளங்களில் (Social network) வெளியாகும் ஆபாசப் படைப்புகள், சிறுவர்களும் தங்களுடைய ஆசிரியர்களைக்கூட செக்ஸ் அடையாளமாகவே (Sex symbol) பார்க்க ஆரம்பித்துவிட்ட பொல்லாத காலம். விபத்து ஏற்பட்டால்கூட, சண்டை வந்துவிட்டால்கூட உடனே வீடியோ எடுக்கவேண்டும் என்ற உணர்வே அநேகரைத் தட்டி எழுப்பிவிட்டிருக்கிறது. உதவிசெய்யத் தீவிரிக்கவேண்டிய கால்கள், கைகளால் செல்போன் தேடப்பட்டு படமாக்கி உடனடியாக வைரலாக்கிவிடத் துடிக்கும் இதயமே இன்றைய இளையதலைமுறையின் இலக்கு.
கூடவே, போதைப் பொருட்களின் நடமாட்டம். பள்ளிச் சிறுவர்களையும் சீரழிக்க, அதில் கடத்தல் தொழில் ஓகோவென்று நடக்கிறதல்லவா! 445.9 per 1,00,000 ஒருவர் கிரிமினல் கேஸில் மாட்டிக்கொள்கிறார் என்பது, இது பதிவுசெய்யப்பட்டவை மாத்திரமே!
பெண்பிள்ளைகள் பாதுகாக்கப்பட பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகள், தெருக்கள், அலுவலகங்கள், பொது இடங்கள் அனைத்திலும் CCTV கேமிராக்கள் வைக்கவேண்டிய கட்டாயம்.
பெண்களை மிகவும் போற்றுகிறோம் என்று சொல்லும் பிரதமர், மணிப்பூரில் கிறிஸ்தவப் பெண்களுக்கு நடைபெற்றதனைக் கண்டுகொள்ளவேயில்லை. பெண்களுக்கான இலவசம் கொஞ்சம் கொஞ்சமாகக்கூடிவருகிறது. இலவச பஸ் பயணம் போன்றவை தவறாகவே உபயோகத்தில் உள்ளது! தவறுகளைத் தண்டித்தால் மட்டும் போதுமா! அவைகளின் பிறப்பிடம்வரை அதின் கருவை அறுத்திடவிடாமல் சத்துரு கவனமாயிருக்கிறான்.
ஊடகங்கள், 'எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கேதுவானதாகவே" காரியங்களைச் செய்துவருகிறது. மனிதனை மிருகமாக மாற்றும் கலை அதற்கு கைவந்தது. அறிவின் கனியைச் சாப்பிடச் சொல்லி ஏவாளை ஏவின சாத்தான், இன்றும் வரும் தலைமுறையை, வேகமாக தேவனையும் பெற்றோரையும் விட்டுப் பிரித்துவிடுவதற்குப் போதுமான வல்லமை பெற்றவன்.
'பாதாளக் குழியைத் திறந்தான் பெருஞ்சூளையிலிருந்து புகை எழும்பிற்று... அந்தப் புகையிலிருந்து புறப்பட்ட வெட்டுக்கிளிகள்" தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரை மாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது... அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போதும் உண்டாகும் வேதனையைப் போலிருக்கும்" (வெளி. 9:4,5); அது இதுதானோ!
'பொருளாசை என்னும் அரக்கனும்
பொலிவுடனே மனதினை ஆள்கின்றதே
பொல்லாப்புச் செய்யும் கைகளும்
பொய் தீர்க்கதரிசனமும் பெருகிடுதே"
கள்ளரின் உபதேசப் புரட்டலும்
கர்த்தரின் வார்த்தையை மிதிக்கிறதே
கல்வாரி நாயகனின் கதறுதலும்
கவனிப்பாரற்றுப் போகிறதே
என்று நான் 2000 ஆண்டுகள் முடிந்து புதிய ஆயிர ஆண்டுகள் ஆரம்பித்ததில் எழுதின பாடல் இது. 25 ஆண்டுகள் ஆகிவிட்டது, 'சபைகள் இதனை அறிய மறுக்கிறதே". என்றைக்கு இந்த தூங்கும் சபை, உணர்வற்ற சபை தன்னுடைய கடமையை உணர்ந்து செயல்படத் தொடங்கும்?.
போர்க்குதிரையினைக் குறித்துப் பேசும் கர்த்தர்,
'அதின் தொண்டையில் குமுறலை வைத்தாரே. ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுவதுபோல மிரட்டக்கூடாதே. அதின் நாசியின் செருக்கு பயங்கரமாயிருக்குமே. அது தரையிலே தாளடித்து, தன் பலத்தில் களித்து, ஆயுதங்களைத் தரித்தவருக்கு எதிராகப் புறப்படும். அது கலங்காமலும், பட்டயத்துக்குப் பின்வாங்காமலுமிருந்து, பயப்படுதலை அலட்சியம்பண்ணுமே! அம்பறாத்தூணியும், மின்னுகிற ஈட்டியும், கேடகமும் அதின் மேல் கலகலக்கும்போது, கர்வமும் மூர்க்கமுங் கொண்டு தரையை விழுங்கிவிடுகிறதுபோல் அநுமானித்து, எக்காளத்தின் தொனிக்கு அஞ்சாமல் பாயும்.
எக்காளம் தொனிக்கும்போது, அது நிகியென்று கனைக்கும். யுத்தத்தையும், படைத் தலைவரின் ஆர்ப்பரிப்பையும் தூரத்திலிருந்து மோப்பம் பிடிக்கும்" (யோபு 39:19-25).
என்றைக்கு சபை யுத்த குதிரையைப் போல யுத்தத்தின் எதிரியையும் ஆர்ப்பரிப்பையும் தூரத்திலிருந்து மோப்பம் பிடித்து தன்னுடையவர்களை ஆயத்தப்படுத்தும்???
நம்முடைய யுத்தம் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்லவே... வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் உண்டே!! (எபே. 6:12)
தன்னுடைய சபையார், 'தீங்கு நாளிலே அவைகளை எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு" எப்படி பயிற்சி தரப்போகிறார்கள்.
'சிறு குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டுவதுபோல் ஆட்டி, ஆட்டி தூங்கப்பண்ணுவீர்கள்" பாஸ்டர்களே, சுவிசேஷகர்களே, பாடகர்களே, தீர்க்கதரிசிகளே, அப்போஸ்தலர்களே, போதகர்களே!!!
பவுல் மரிக்கப்போகும் தருவாயிலும், தன்னுடைய ஆவிக்குரிய மகனை, 'நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி. நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கனுபவி என்றும் (2 தீமோ. 2:3,4), 'நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கனுபவி" (2 தீமோ. 4:5,6) என்றும் உற்சாகப்படுத்துகிறார்.
என் உடன் ஊழியனும், பிரியமான சகோதரனும் ஆகிய சகோ. சுரேஷ் எழுதி வெளியிட ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பாடலோடு முடிக்கிறேன். அவை அர்த்த செரிவுள்ளவை. நம்மை முழங்காலில் தள்ள வல்லவை!
எழுப்புதல் நாதரின் ஏக்கம்
எழும்பி நீ ஜொலிப்பதே நோக்கம்
உனக்குள் உருவாகும் மாற்றம்
உலகில் உருவாக்கும் தாக்கம் (சபையில், தேசத்தில்)
அர்ப்பணம் அனைத்தும் அகன்றதேன்
அவர் அன்பு உனக்குள் குறைந்ததேன்
ஆவியின் அனலும் அவிந்ததேன்
அபிஷேகமும் உன் வாழ்வில் மறைந்ததேன்
பரலோக மன்னா கசந்ததேன்
பலவித பெலவீனம் வந்ததேன்
பரமனின் பாதம் வெறுத்ததேன்
பரலோக சிந்தை மறந்ததேன்
இரகசிய பாவம் சூழ்ந்ததேன்
இவ்வுலக மோகம் கவர்ந்ததேன்
இருதயம் இருளால் நிறைந்ததேன்
இயேசுவின் சிநேகம் மறைந்ததேன்
திரும்பவும் கட்டிடும் தெய்வமே
தேடிடும் அன்பு நேசரே
தருவாயா திரும்பவும் உன்னையே
தயவாய் தமக்கென்று ஆள்வாரே
அன்பரைப் போல ஜெயம் பெற்ற யுத்தம் செய்யவும்
அவரோடு ஆளும் நாளை வாஞ்சிப்போம்
அதுவே நம் சபைக்குச் செய்தியாகட்டும்
ஆவியானவரின் துணையால் அவருடன் சிங்காசனம் அமருவோம்
(வெளி. 3:21)
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
----------------------------------------------------------------------------------------------
'மகாகும்பமேளாவின் நிகழ்வுகள்'
(பத்திரிக்கைச் செய்திகள்)
----------------------------------------------------------------------------------------------
- 65 கோடி மக்கள் குளித்தார்கள் என்ற மாயையான எண்ணிக்கை. அதாவது, 2-ல் 1 இந்தியர் இதில் பங்கேற்றார் என்பது அபத்தம்.
- சாது என்று சொல்லும் சிலர், நடுரோட்டில் (கும்பமேளா மைதானத்தில்) கடந்து போகிற எல்லாரையும் சவுக்கால் அடிக்கிறார்கள்| அந்த அடி ஆசீர்வாதமானதாம்.
- 'நிர்வாணச் சாமியார்கள்" நடப்பதனைக் கும்பிட்டு வணங்குதல்.
- எப்படியாவது 'சங்கமத்தில்" சேர்ந்துவிடவேண்டும் என்று எண்ணி, பீகாரில் A/c கோச்களில் ஜன்னலை அடித்து நொறுக்கி, ஜனங்களை கெட்டவார்த்தை சொல்லித் திட்டி, பாவநிவர்த்திக்காகப் பயணிக்கிறேன் என்று சொல்லும் கூட்டம்.
- வாலிபன் ஒருவன், தன்னுடைய காதலியுடன் (அவளின் அம்மாவிடம் அனுமதி பெற்ற பின்னர்) சங்கமம் செல்கிறான். வரும் வழியில் இருவருக்கும் ஏற்பட்ட தகறாறில், அவளுடைய துப்பட்டாவினால் கழுத்தை நெருக்கிக் கொன்று, பின்னர் அவளுடைய தலையை வெட்டி காட்டில் எறிந்துவிட்டு, சங்கமத்தில் குளித்து 'பாவம் போக்கிக்கொண்டான்" என்கிற செய்தி.
- தம்பதி ஒன்று பாவம் போக்கப் புறப்பட்டுப் போகும் வழியில், மனைவியைக் கொன்று ஆற்றில் வீசிவிட்டு, திரும்ப ஊர் திரும்பி, மனைவி கூட்டத்தில் காணாமல்போய்விட்டதாகக் கூறி மற்றவரை ஏமாற்றியது.
- மிதியுண்டு செத்தோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100 இருக்க (கண்ணால் கண்டவர்களின் அறிக்கை), 30 பேர் என்று அரசாங்கமே கூறி மறைத்தது. கலவரமாக மாறாமலிருக்க என்று உ.பி முதல்வரே சொல்கிறார்.
- டெல்லி இரயில்வே ஸ்டேஷனில் மிதியுண்டு இறந்தவர் எண்ணிக்கை 18 பேர் (குழந்தைகள் உட்பட).
- பிரயாணத்தில் ஏற்பட்ட விபத்துகளிலும் இறந்தவர் எண்ணிக்கை ஏராளம்.
- கஞ்சா போன்ற போதை பொருட்களைத் தாராளமாக உபயோகிக்கும் சாதுக்களின் கண்காட்சிகள்.
- இது 'கண்மூடித்தன பக்தி" என்று ஒரு கூடாரத்தின் வாசலில் எழுதி தொங்கவிட்டவர், நன்றாக அடிக்கப்பட்டார் இந்த 'பரமாத்துமாக்களினால்".
- வரும் வழியில் 'வேப்பங் குச்சிகளைக்" கட்டி ஒருவன் விற்றுக்கொண்டிருக்கிறான். ஒரு 'Bundle" எவ்வளவு என்று காரில் வந்த ஒருவர் கேட்க, அவன் அது Rs.. 10000 என்கிறான் (ஏன் 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் Rs. 50 - Rs.. 100 வரை விற்கப்பட்டதே). அதனை வாங்கி தன் காரில் வைத்துக்கொண்டுபோய், சின்னக் குச்சிகளாக வெட்டி, ஒன்று Rs.. 10 என்று விற்க, அவருக்குக் கிடைத்தது Rs. 1 லட்சம். என்னே! இலாபம்!! புத்திசாலிதானே.
- மஹராஷ்டிராவில் ஒரு கம்பெனி, 'உங்கள் புகைப்படத்தினைத் தாருங்கள், நாங்கள் அதனை கங்கையில் முழுக்கித் தருகிறோம்; ஏன் அங்கே போய் அவஸ்தைப்படவேண்டும் என்று விளம்பரப்படுத்தி, அதனை செய்துதருவதற்கு Rs.. 1100 கட்டணம் வைத்ததனை நம்பி, தங்களின் Photo அனுப்பிவித்து 'மோட்சம் செல்ல வழியைத் தேடினவர்களும்" உண்டு.
- மற்றொருவன் Video Call-ல் படத்தினைப் பெற்று, தன் phone-ஐ கங்கையில் முக்கி எடுத்து, வரமுடியாதவர்களுக்காக மூழ்கி எழுந்தான். அதனை வேறொருவரால் வீடியோ எடுக்கவைத்து அதனை கட்டணம் செலுத்தியவர்களுக்கு அனுப்பிவைத்தனர்.
- ஒரு கலசத்தில் கங்கை நீரை சங்கமத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், சில பட்டணங்களில் இருக்கும் நீச்சல் குளத்தில் ஊற்றி, அதில் மூழ்கினால் 'முக்தி" என்று சொன்ன வியாபாரமும் நடந்தது.
- பெண்கள் உடைமாற்றும் அறையில் திருட்டுத்தனமாக சாமியார் படம் எடுக்க முயன்றார்; அதனால், கைதுசெய்யப்பட்டார்.
- சேற்றிலேயே உருண்டு புரண்டு கங்கையைத் தொட்டவர்களும் உண்டு.
- அதில் ஓடும் சாக்கடைத் தண்ணீரில் முக்கி ஒருவர் முள்ளங்கி சாப்பிடுகிறார்.
- இந்த விழாவினால் கங்கை நதியில் குளிப்பதற்கு தண்ணீர் தகுதியற்றதாகிறது என்று ஆய்வுக்கூட அறிக்கை (10 மடங்கு).
- இதில் கலந்துகொண்டுவந்த அநேகர் தோல் வியாதியோடு GEMS ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தார்கள்.
- இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர், அம்பானியின் குடும்பம், அநேக சினிமா நட்சத்திரங்கள் என மேலிருப்பவர்களும், குஷ்டரோகிகளும் சேர்ந்தே இதில் மூழ்கி எழுந்தனர்.
- பிறப்புச் சக்கரத்திலிருந்து விடுதலை வேண்டும் என்றுதானே வந்தார்கள். ஆனால், அடுத்த ஜென்மமாவது நன்றாக அமையவேண்டும் என்றே பலர் பிராத்தனை செய்தனர்.
- இந்த விழாவினை, 'லல்லு பிரசாத்" இது வீணானது (Faltu) என்றார். மம்தா பானர்ஜியோ 'மரண மேளா" என்றார். கூடவே 144 வருடத்திற்கு ஒருமுறை என்று கூறுவது 'தவறு" என்றார். அகிலேஷ் யாதவும் இதனை 'ராவணன்" வேடம் உ.பி முதல்வர் அணிந்திருக்கிறார் என்றார்.
- அரசாங்கங்கள் அநேக 'கள்ள" விளம்பரங்களையும், தகவல்களையும் தந்து மக்களை வஞ்சிக்கிறது. ஒன்றிய அரசும், உ.பி அரசும் இணைந்து செய்யும் இந்தத் திட்டம், இந்துக்களின் உணர்வைத் தூண்டிவிட்டு, மற்றவர்களுக்கு அவர்களைச் சத்துருவாக்கி, அதிக ஓட்டுகளைப் பெற்று ஆட்சியில் அசையாமல் அமர்ந்து இந்த தேசத்தின் அரசியல் சட்டத்தினை மாற்றி, ரஷ்யாவையோ அல்லது சீனாவைப் போல மாறிவிடவேண்டும் என்பதே (ஒரு கட்சி, ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தேர்தல் என்பவை போன்றவை).
- கும்பமேளாவில் உ.பி-யின் பொருளாதாரம் உயர்ந்தது (அது மக்களிடம் உறிந்து எடுத்ததினால் உண்டானது). அதன் மயக்கம் உ.பி. முதல்வரை, தொடர்ந்து 5 இடங்களில் அப்படிப்பட்டக் காரியத்தினை நடப்பித்து, தன்னை இந்த நாட்டுக்குத் தேவையான பிரதமராக மாற்றப் போதுமான 'இந்துத்துவத்தின்" கொள்கையைக் கொண்டு முன்னேற முயன்றுவர வைத்திருக்கிறது.
- 170 படகுகள் மூலம் நாளொன்றுக்கு ஒரு படகுக்கு RS. 50,000 - Rs.52,000 வரை சம்பாத்தியம் கிடைத்தது என்று பெருமைப்பட்டுக்கொண்டார் உ.பி முதல்வர்.
- மகா கும்பமேளா காரணமாக, கடன்களை விநியோகிக்கக்கூட வங்கிகளிடம் போதுமானப் பணம் இல்லை (SBI அறிக்கை).
அன்று எருசலேமின் நிலையைக் கேட்ட
நெகேமியாவை, அழுது, உபவாசித்து,
தேவனை நோக்கி மன்றாடச் செய்தது.
இன்றும் செய்தியைக் கேட்கும்
நாம் என்ன செய்கிறோம்...???