கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,
நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும், சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன் (எசே. 22:30) என்று ஏங்கும் தேவனுடைய நாமத்தில் வாழ்த்துகள். தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, அவருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறதே (2 நாளா. 16:9). அவர் நம்மையும் கணக்கில் சேர்த்துக்கொள்ளத்தக்க இடத்தில் தேவன் நம் ஒவ்வொருவரையும் நிறுத்துவாராக!
'பாவம் பெருகுதே பாரும் பரன் இயேசுவே
அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே
ஆத்தும இரட்சிப்பிழந்தவர் ஆயிரம் ஆயிரமாய்
அன்றாடகம் இந்த மண்ணடியில் அழிந்து சாகின்றாரே'
என்று புலம்பினார்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு சகோதரி சாராள் நௌரோஜி. ஆனால், இன்றைக்கோ, ஆசீர்வாதப் பாடல்களும், அனுதின ஜீவியத்தில் ஆறுதல் பெற ஏவும்; பாடல்களும், அன்றாட வாழ்க்கையின் தேவைகளையே சுற்றி வலம் வரும் வார்த்தை ஜாலங்களும், இசை என்ற பெயரில் மனிதர்களை மயக்கத்தில் ஆழ்த்தும் பாடல்களும், இசையையே மையமாகக் கொண்டு தேவ ஜனங்களின் உணர்ச்சிகளைத் தட்டிவிடும் பாடல்களும் ஆவிக்குரிய உலகினைச் சீரழித்துவிட்டன. அவை ஜனத்தினை வேறு இயேசுவிடமும், வேறு சுவிசேஷத்திடமும், வேறு ஆவியின் கிரியைகளை வாஞ்சிக்கும் வாழ்க்கைக்கும் தள்ளிவிட்டுவிட்டது (2 கொரி. 11:3,4).
இந்த ஆண்டினை பல பிரபலங்கள் 'ஆசீர்வாத மழை பொழியும்' என்றே ஜனத்தினை நம்பச் செய்ய முயற்சி எடுக்கிறார்கள். ஆனால், சுற்றிலும் நடக்கும் காரியங்களை உற்றுநோக்கினால், இவர்கள் கள்ளர்கள் என்பதும், சுய ஆதாயத்தினைக் கருத்தில் கொண்டே, தெரிந்தே இதனைச் செய்கிறார்களென்பதும், சுற்றி நடப்பவைகளைக் குறித்து உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள் (மத். 24:37-39) என்பதும் தெளிவு. சிலவற்றைப் பார்ப்போம்.
1. சுற்றிலும் நடப்பவை குழப்பமானவைகளே!
ஒன்றைக் குறித்து ஒருமித்த கருத்தோ, தெளிவான விடைகளோ, அரசியலிலும், ஆளுமையிலும் (புழஎநசயெnஉந), ஆன்மீகத்திலும், சபையிலும், சங்கத்திலும், நகரத்திலும், கிராமத்திலும், பொருளாதார உலகிலும், மருத்துவ உலகிலும், டெக்னிக்கல் உலகிலும் காணப்படவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
ஆனால், 'உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்' (ஏசா. 26:3) என்பதுதான் ஏசாயா தீர்க்கனின் உறுதியான அறிக்கை. அதனைக் கூறி அறிவிக்க அழைக்கப்பட்டவர்கள், சிறியோர் முதல் பெரியோர் மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர், இதுவுமல்லாமல், தீர்க்கதரிசிகள் முதல் ஆசாரியர்கள் மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர். சமாதானமில்லாதிருந்தும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள் (எரே. 6:14; 8:11; 8:15; 14:13; 23:17).
என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும் இந்த ஜனத்தைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரே. 16:5). எனவே, சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், நரகத்திற்குத் தீவிரிக்கும் ஜனத்தின் மேல் பொழியவேண்டி தேவ ஜனத்தினைக் கதறவைக்கிற உண்மையான தீர்க்கதரிசிகளை தேவன் எழுப்புவாராக!
கிருபையை தவறாகப் புரிந்துகொண்ட ஒரு பெருங்கூட்டப் பிரசங்கிகளும், பாடகர்களும், போதகர்களும், தீர்க்கதரிசிகளும், தரிசனக்காரர்களும், அகற்றப்படவோ அல்லது மனந்திரும்பவோ கட்டாயப்படுத்திக் கடிந்துகொண்டு புத்திசொல்லும் மூத்த ஊழியர்கள் இன்று அதிகமான தேவை (2 தீமோ. 4:3-5; தீத்து 2:15; சங். 141:5; மீகா 3:8; நீதி. 27:5; நீதி. 1:23).
2. பக்திமார்க்கத்தாரின் குருட்டாட்டம்
இன்று இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் (கிட்டத்தட்ட 45 கோடி மக்கள்), கங்கையும், யமுனாவும், சரஸ்வதி என்ற மர்ம நதியும் இணையும் அலகாபாத்தில், 144 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் 'மகா கும்பு' என்ற விழாவில் மூழ்கினார்கள் என்பது செய்தியாய் மாத்திரம் இருந்துவிட்டதோ? அவர்களின் நோக்கங்கள் இரண்டு: 1) பாவங்கள் கழுவப்படவேண்டும் 2) பிறப்புச் சக்கரத்தில் இருந்து விடுதலை பெறவேண்டும்.
அநேகர் மிதிபட்டு நதியோரத்திலும், ரயில் நிலையங்களிலும், வழியில் ஏற்பட்ட வாகன விபத்துகளிலும் செத்து மடிந்தாலும், இந்த தாகத்தினைத் தடுக்கமுடியவில்லை.
அவர்கள் தேடுகிற இந்த இரண்டினையும் நம்முடைய இரட்சகராகிய இயேசுவில் நாம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாமே (தீத்து 3:4-7; 1 கொரி. 6:8-11). இது உரக்கக் கூறி தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் கேட்கப்பண்ணவேண்டியது, அதுவும் அவசரமாக நமது மேல் விழுந்த பெரும் கடமையல்லவோ (1 கொரி. 9:10).
இதற்காக ஜெபிக்கும் ஒரு சேனையை எழுப்பிடத் தவறவிட்டுவிட்டோமே! தேர்தல் காலத்தில் ஜெபித்த ஜெபத்தில், மூன்றில் ஒன்று (பிரதமர் திரு. மோடியும், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவும், அம்பானியும், ஜனாதிபதி திருமதி திரவுபதி முர்முவும், சாதாரண மனிதனும் நிர்வாணச் சாமியார்களின் களியாட்டங்களின் மத்தியில் மூழ்கி எழுந்தனர். பீகாரிலும், உ.பியிலும் போக்குவரத்தில் ஏற்பட்டத் தொல்லைகளை 45 நாட்கள் நாங்கள் அனுபவித்தோம்) கூட ஏறெடுக்கப்படவில்லையே!
'வாலிபன் ஒருவன் தன் தோழியை அவளுடைய தாயின் அனுமதியோடு இதில் பங்குபெற தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கொண்டுவந்தான். வரும் வழியில் அவளின் துப்பட்டாவை வைத்து கழுத்தை இறுக்கிக் கொன்று, கழுத்தை வெட்டி காட்டில் எறிந்துவிட்டு, அந்த பாவம் போக கங்கையில் நீராடினான்' என்பது செய்தி. இவை நம்மை அசைக்காவிடில் நாம் இரட்சிக்கப்பட்டவர்கள்தானா என்பது கேள்விக்குறியாகிறது??? ஏதோ ஒரு மாயையைப் பின்பற்றி நம்மை இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்வது வெட்கக்கேடு!!
'இவர்கள் பேசாதிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்...
நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்n;பாழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது' (லூக். 19:40-42) என்றாரே இயேசு.
மஹாராஷ்டிராவின் மந்திரி இன்னும் ஒருபடி மேலே போய், மக்களைப் பார்த்து, 'நீங்கள் மகா கும்பத்திற்குப் போய் கஷ்டப்படவேண்டிய அவசியமில்லை. உங்கள் புகைப்படத்தினைத் தாருங்கள் நாங்கள் அதனை கங்கையில் முழுக்கி உங்களுக்குத் தருகிறோம் என்றார்; எத்தனை அபத்தம்!!
'கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்
புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்
கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்?
நம்மில் யார் யார் யாரோ?
திறப்பிலே யார் யார் யாரோ?'
என்று புலம்பினார் அண்ணன் பேட்ரிக் ஜோஷ்வா!
'பெலத்தின் மேல் பெலன் பெருகிடும்
கிருபையின் மேல் கிருபை பெருகிடும்
ஜெபத்தினால் ஜெபத்தினால்
காத்திருந்து சுதந்தரிப்போம்'
என்ற இரகசியத்தினையும் சொல்லிச் சென்றாரே.
3. இந்தியப் பொருளாதாரம்
திருமதி நிர்மலா சீத்தாராமனின் பட்ஜெட்டோ, நம்முடைய இன்றைய ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கையோ, பிரதமர் திரு. மோடி மாநில முதல்வர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் இந்தியாவுக்குள் அநேக பணம் படைத்தோரைக் கொண்டுவரச் செய்கிறதோ, பகட்டாகக் கூறி அறிவிக்கப்பட்டாலும், விளம்பரம் அதனைக் குறித்துச் செய்யப்பட்டாலும், நடக்கும் ஊழலும், மாற்றோரின் கருத்துகளைப் புறக்கணிக்கும் ஆளுகை செய்வோராலும், நம் நாட்டில் ஏழைக்கும் வசதிபடைத்தோருக்கும் இடைவெளியைப் பெருக்கவே வேகமாக செய்துவருகிறது. கூடவே, திருட்டும், கொள்ளையும், அதனைத் தொடர்ந்த கொலைகளும்தானே பெருகியிருக்கிறது. தங்களுடைய பொய்யான வாக்குறுதிகள் மூலம், பேச்சுத்திறன் மூலம், விளம்பரத்தின் மூலம் ஜனத்தினை ஒருவித மயக்கத்தில் தள்ளிவிட்ட நம்முடைய தலைவர்கள் செய்த தீங்கு நம் நாட்டை குழிக்குள் தள்ளிவிட்டுவிட்டது. 5 Trillion டாலர் அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்திவிடுவோம் என்று அடிக்கடி பிரதமர் திரு. மோடியும் அவருடைய சகாக்களும் கூறி முழங்கிட்டாலும், 3 Trillion டாலர்தான் தற்போது நமது நிலை. உலகிற்கு இந்திய பொருளாதாரம் தருவது வெறும் 3.5%; ஆனால், 26% தரும் அமெரிக்காவும் 16% தரும் சைனாவும்தான் நமக்குப் போட்டி என்று கூறுவது அர்த்தமற்றது. தன்னை 'விஷ்வ குரு' என்று நினைத்து செயல்படும் இந்தியப் பிரதமர் 2047-ல் நாம் சைனாவை முந்திவிடுவோம் என்று சொல்வது வெறும் பகல் கனவு என்பதனை அறிந்தவர் யார்?
'இந்தியா செழிக்கவேண்டும்' என்பது நம்முடைய ஜெபம்தான்; ஆனால், தேவனுக்குப் பயப்படக்கூடிய தலைவர்கள் இல்லையே. மாய வார்த்தைகளையே நம்முடைய ஆவிக்குரிய தலைவர்கள் பொய்யாய்க் கூறி, அலப்பி, ஜனத்திற்கு உண்மையைக் கூறத் தவறிவிட்டார்கள்.
'என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன்' (2 நாளா. 7:14) என்பது மாறாத தேவ எதிர்பார்ப்பு அல்லவோ!
இந்த வசனத்தை அடிக்கடி உபயோகப்படுத்தும் பிரசங்கிகளும், அநேகந்தரம் கள்ளத் தீர்க்கர்களை அடையாளம் கண்டுகொண்டபோதிலும், தங்களின் செல்வாக்கை மாத்திரம் மனதில் வைத்து, அப்படிப்பட்டவர்களோடு கொஞ்சிக் குலாவி, மக்களை ஏமாற்றிவிடுகிறார்களே. கூடவே, அவர்களைப் புகழ்ந்து போற்றி மேடையை அலங்கரித்து பரிசுத்த ஸ்தலங்களைப் பாழாக்கிவிட்டனரே.
ஜனங்களும், 'ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப் போகிறது.
இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாயிருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமற்போகிறார்கள் (எசே. 33:31,32) என்ற வசனத்திற்கு ஒத்தாற்போல்தான் இருக்கிறார்கள். எனவே, தேசத்தில் செழுமை என்பது காணக்கூடாததே.
'FDI (Foreign direct investment) ஆயிரமாயிரமான கோடிகள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டும், 'நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்' (ஆகாய் 1:6). மாற்றுமருந்தாக 'உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்' (ஆகாய் 1:7).
'அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்' (ஆகாய் 1:9) என்றுதானே ஆண்டவர் கூறுகிறார்.
ஏழைக்கும் பணக்காரனுக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம். 52% மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே. 5% மக்கள் கையிலே இந்தியாவின் 40% சொத்து. மத்திய வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் உயர ஏராளமான கடன்கள் வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டு, அனைவரையும் கடனாளியாக்க, எடுக்கும் முயற்சிகளோடு, ஒவ்வொரு இந்தியன் தலையின் மேலும் 2.5 லட்சம் ரூபாய் கடன். பிறக்கும் குழந்தைக்கும் இது பொருந்தும்.
கடன் தள்ளுபடியோ பணம்படைத்தவர்களுக்கே! ஆனால், ஆவிக்குரிய மக்கள் என்று தன்னை அழைத்துக்கொள்ளுவோர் மத்தியில் திருமணத்திலும், விழாக்களிலும், உணவு விடுதிகளிலும் செலவு செய்யப்படும் பணம் அநேக நேரங்களில் கண்ணீரையே வரவழைக்கிறது.
இந்திய பணமதிப்பு சரிந்துகொண்டேபோவதால், விலைவாசிகளைக் கட்டுப்படுத்த முடியாமல், வரிக்கு மேல் வரி விதித்து எளியவர்களை திக்குமுக்காடவே செய்துவருகிறது அரசாங்கம்.
4. Deportation from other countries (நாட்டை விட்டுத் துரத்தப்படுதல்)
உலகின் மாயையில் சிக்கிய ஜனம் மேலைநாடுகளுக்கு எப்படியாகிலும் சென்றுவிடவேண்டும் என்று துடிப்பதால் உண்டானதுதான், திருட்டுத்தனமாக அப்படிப்பட்ட நாடுகளில் குடியேற முயற்சித்தது. ஆனால், 1 கோடி வரை ஏஜென்ட்டுகளுக்கு பணம் கொடுத்தோர் கைகளிலும், இடுப்புகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்டு, இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பப்படும் காட்சி அதிர்ச்சியையும், கண்ணீரையுமே வரவழைக்கிறது. இருந்த பணத்தையும் இழந்தனர் (அநேகர் கடன் பெற்றே சென்றவர்கள்). ஐயோ! என் ஜனமே!!
'அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப் போய்த் தண்ணீரைக் காணாமல் வெறும் பாத்திரங்களோடே திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்' (எரே. 14:3).
'கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்' (நீதி 10:22) என்பதனை தேசத்தின் மக்களுக்குச் சொல்வது யார்?
கீழ்கண்ட பாடல் என் உதடுகளில் தொனித்தது (அதனை லுழரவுரடிந-ல் நீங்கள் கேட்கலாம்). எனவே, உணர்வோம் கடமைதனை; செயல்படுவோம்; மற்றவற்றை அடுத்த மடலில் எழுதுகிறேன்.
தேவை தேவை தேவை
தேசத்தில் மக்கள் தேவனை அறிந்திட
தேவை தேவை தேவை
உம்மோடு உறவாட உள்ளம் துடிக்குதையா!
உலகின் உறவைவிட மனமும் மறுக்குதையா!
1. கபமும் கற்பனையும் செய்யும் வேதனையும்
கல்வாரியில் அனைத்தையும் சிலுவையில் அறைந்திடனும்
......... உம்மோடு
2. நாட்டிலும் சபையிலும் நடக்கும் அசிங்கமெல்லாம்
கல்மனம் உடைக்கும் கல்வாரியால் அழிந்து தொலைந்திடுமே
......... உம்மோடு
3. சுயத்தை சிலுவையில் அறைந்தோர் தேவை இன்று
சுற்றோரும் உற்றோரும் உலகமும் இயேசுவைக் கண்டிடணும்
......... உம்மோடு
4. தேடிடும் உம் கண்கள் என் மேலே படுகிறதே
தேய்ந்த உம் கால்கள் என் உள்ளத்தை முழுதும் நொறுக்கிடுதே
உம்மோடு நடந்திட இதயம் துடிக்குதையா
உலகத்தின் இழுப்பும் தானாய் மறையுதையா
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்