Translate

FEBRUARY 2025

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,


பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், நேர்வழியாகவே ஒவ்வொரு நாளும் நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும்  (மீகா. 2:13), நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையும்கூடப் பிசகிவிடாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்கிறவரும், கடுமையானதாகக் காலங்கள் கண்களுக்குக் காட்சியளித்தாலும், கரம் பிடித்து நம்மை நடத்துகிறவரும், சூழ்நிலைகள் தனது எல்லைக்குள் நம்மை சுருக்கி வைக்க முயற்சித்தாலும், எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் ஆவியில் அவரோடு முன்னேறிச் செல்ல உதவிசெய்கிறவருமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். 

பிரியமானவர்களே! இந்நாட்களில், சத்தியத்திற்காக முன்னேறிச் செல்லும் நாம், சத்துருவின் தந்திரங்களைப் பற்றிய அறிவுடையவர்களாகவும் காணப்படவேண்டுமே! ஏனெனில், தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல விதங்களில் தொல்லைகளைக் கொடுத்து, தேவ மனிதர்களின் வேலைகளைத் தடுத்து, பரலோகத்தின் பணிகளுக்கு பாதிப்பை உண்டாக்க விரும்புபவன் சத்துரு. பிற மனிதர்கள் மூலமாக மாத்திரமல்ல, உடனிருப்போருக்குள்ளும் ஊடுருவி அதனைச் சாதிக்கவும் செய்து முடிக்கவும் துடிப்பவன் அவன்| இதனை நாம் அறிந்துகொள்வது அவசியம். 

'சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்| எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது' (நெகே. 1:3) என்ற செய்தியை  அரமனையிலிருந்த நெகேமியா யூதாவிலிருந்து வந்த சகோதரரிடத்திலும் மற்றும் சில மனுஷரிடத்திலும் விசாரித்து அறிந்தபோது, துக்கம் அவனது உள்ளத்தில் துளிர்விடத்தொடங்கியது (நெகே. 1:4). இத்தகைய 'துக்கமே நமது செயல்பாட்டிற்கான துவக்கம்.'  

என்றபோதிலும், நெகேமியா புறப்பட்டுச் சென்று, பணிகளைத் தொடங்கியபோது,  சன்பல்லாத் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி: அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ (நெகே. 4:1,2) என்று இயலாததென அவர்களை ஏளனம் செய்கிறான்| அவ்வாறே, தொபியாவும், அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் (நெகே. 4:3) என்ற நகைப்புக்குரிய வார்த்தைகளால் கேலி பேசுகிறான். எருசலேமைக் கட்டுகிறோம் என்ற நற்செய்தியினால் இஸ்ரவேலரின் மனம் நிறைந்திருக்கும்போது, 'துர்ச்செய்தியினால்' தூற்றிப் பேசுகிறார்கள் சத்துருக்கள். எனினும், கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாக்கும்படியான இவர்களது கேலிப் பேச்சுகள் வேலைகளிலிருந்து அவர்களை விலக்கிவிடவில்லையே! ஆம், 'தேவனுக்கடுத்த துக்கங்களை மனதில் சுமந்தால், சத்துருவின் சத்தங்களுக்குச் செவிசாய்க்காமல், அழைப்பிலே நாம் உறுதியாக நிற்க முடியும் என்பது நிச்சயம்.'    

இன்றும், தேவ மனிதர்களுக்கு விரோதமாகவும் மற்றும் ஊழியங்களுக்கு விரோதமாகவும் இத்தகைய வார்த்தைகளை உச்சரிக்கும் சத்துருக்களுக்குச் சாதகமான மனிதர்கள் உண்டு. இத்தகையோர், ஊழியங்களைக் கட்டுவதற்கு அல்ல, கலங்கடிப்பதற்கே தங்கள் கலைகளைப் பயன்படுத்துகிறார்கள்! இத்தகைய மனிதர்களிடத்திலும், துர்ச்செய்தியினை அனுப்புவதற்கான தனது தூதர்களாக இவர்களைப் பயன்படுத்தும் சத்துருவின் வலைகளிலும் நாம் சிக்கிக்கொள்ளக்கூடாதே!   

அவ்வாறே, 'நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ' (ஆதி. 12:1) என்று ஆபிரகாமை அழைத்தார் ஆண்டவர். அழைப்பினைத் தொடர்ந்த அவனது பயணத்தில், 'உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்' (ஆதி. 15:13) என்ற இடைவெளியினைத் தொடர்ந்து, 'அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்' (யாத். 3:8) என்று தனது செயல்பாட்டினை தேவன் தொடங்கியபோது, 

கானான் தேசத்தைச் சுற்றிப் பார்க்கும்படியாக அனுப்பப்பட்ட மனிதர்களுள் ஒருவனான காலேப், 'நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்| நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்' (எண். 13:30) என்ற நற்செய்தியினை அறிவிக்கின்றான். ஆனால், மறுபுறத்தில், அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ: 'நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள். அதுமாத்திரமல்ல, நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்| நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்| நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்' என்று சொல்லி, இஸ்ரவேலர் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்புமளவிற்கும், இராமுழுதும் அழுமளவிற்கும் தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்து  துர்ச்செய்தி  பரம்பச்செய்தார்கள் (எண்;. 13:31-33| 14:1). ஒன்றாகப் பயணித்தவர்கள்தான்| என்றபோதிலும், இவர்களது மாம்சீகப் பார்வை, இவர்களை துர்ச்செய்தியின் தூதர்களாக்கிவிட்டதே! இத்தகைய பார்வையுடையோரிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே! தேவ ஜனங்களின் வெற்றியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் உலகத்தில் உண்டு என்பது உண்மையே| என்றபோதிலும், அவர்களது வீழ்ச்சியையும் மற்றும் தோல்வியையும் கூடவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் மற்றொரு கூட்டமும் மறைவாக உண்டு என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ராஜாவாகிய யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், கர்த்தருடைய வார்த்தையை அறிவித்த தேவனுடைய மனுஷனைக் குறித்துக் கேள்விப்பட்ட கிழவனான தீர்க்கதரிசி, தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்து போய், 'உம்மைப் போல நானும் தீர்க்கதரிசிதான்| அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான்' என்று அவனிடத்தில் பொய் சொன்னபோது (1இராஜா. 13:18), அதனை நம்பி கிழவனான தீர்க்கதரிசியின் வீட்டிலே அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்ததினால் (1இராஜா. 13:19), தேவனுடைய மனுஷன் வழியில் சிங்கத்தினால் கொன்றுபோடப்பட்டானே! (1இராஜா. 13:24) தேவனுடைய செய்தியை அறிவிக்கும் நம்முடைய வாழ்க்கையில் இத்தகைய மனிதர்கள் நுழைந்துவிடாதபடிக்கு கவனமாயிருப்போம். தேவன் பயன்படுத்தும் பாத்திரங்களான நாம் நம்முடைய ஆத்துமாக்களை பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ளுவோம். தேவன் நம்மோடு பேசின வார்த்தைகளை, மனிதர்களுக்காக மாற்றாதபடி கர்த்தர் நம்மைக் காப்பாராக!

இத்தகைய மக்கள், ஆவிக்குரியவர்களைப் போல பேசினாலும், ஆத்துமாவுக்கு இதமான வார்த்தைகளை உதிர்த்தாலும், அவர்களது உள்ளமோ நமது வீழ்ச்சியிலேயே நோக்கமாயிருக்கும். இதனை அறியாமலும் மற்றும் அவர்களால் உண்டாகவிருக்கும் ஆபத்துகளை உணராமலும் அத்தகைய மனிதர்களோடு உறவாடிக்கொண்டிருப்போரின் வாழ்க்கை வீழ்ச்சியினைச் சந்திக்கக்கூடுமே! இத்தகையோரின் உறவு, 'தொடர்பு' என்று தொடங்கினாலும், ஆவிக்குரிய வாழ்க்கையின் மேல் கொஞ்சம் கொஞ்சமாகப் படர்ந்து, இறுதியில் நெடுநாள் விளைந்த நெற்கதிராக, அறுவடைக்குத் தயாராக நிற்கும்  ஆத்துமாவைக்கூட ஆண்டவரிடமிருந்து தூ}ரப்படுத்திவிடக்கூடும்| அத்துடன், ஆவிக்குரிய வாழ்க்கையையும் அடையாளமின்றி அழித்துவிடவும்கூடும். 

அதுமாத்திரமல்ல, மற்றவர்களைக் குறித்த பாராட்டுதலுக்கு, நமது உள்ளம் பகையைப் பிரதிபலிக்காதபடிக்கும் காத்துக்கொள்வதும் அவசியம். கோலியாத் இஸ்ரவேலை நிந்தித்ததை தாவீது கேட்டபோது, 'இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்கவேண்டியதில்லை| உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன்' (1சாமு. 17:32) என்று சொல்லி, கோலியாத்தின் மீது வெற்றியும் பெறுகின்றான். கோலியாத் வீழ்த்தப்பட்டுவிட்டான் என்ற நற்செய்தியினால் ஜனங்கள் மகிழ்ந்துகொண்டிருந்தபோது, 'சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்' (1சாமு. 18:7) என்ற ஸ்திரீகளின் பாட்டு ராஜாவாகிய சவுலுக்கு துர்ச்செய்தியாயிருந்தது. அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்| இன்னும் ராஜாங்கம் மாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான் (1சாமு. 18:8,9)| மேலும், தனது அரியணையே தாவீதினிடத்தில் பறிபோய்விடுமோ என்றும், தனது குமாரனுக்கு ராஜாங்கம் நிலைப்படாமற்போய்விடுமோ என்றும் (1சாமு. 20:31) பயப்படத் தொடங்கினான் சவுல்.     

'கோலியாத்தை வீழ்த்தியவன்' என்று அறிந்திருந்தும், 'தனக்குப் பிரயோஜனமானவன்' என்று உணர்ந்திருந்தும், 'தன்னால் செய்யமுடியாததை செய்து முடித்தவன்' என்று தெரிந்திருந்தும், அரியணையை விட்டுக்கொடுக்க சவுல் ஆயத்தமாக இல்லை! தாவீதை வீழ்த்தவே வகைதேடிக்கொண்டிருந்தான் சவுல். தனது மகளை தாவீதுக்கு கொடுக்கும் முன், 'ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள்' என்று சவுல் சொல்லியனுப்பினது, மீண்டும் தாவீதின் வீரத்தை பெலிஸ்தியர்களிடத்தில் நிரூபிக்க அல்ல| மாறாக, அவனை பெலிஸ்தியர்களின் கைகளில் விழவைக்கவே! 'தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது' (1சாமு. 18:25) என்றல்லவா சவுலின் சிந்தையைக் குறித்து வேதம் சித்தரிக்கின்றது. 'என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்' (யோவான் 14:12) என்ற இயேசுவின் குணத்திற்கு சவுலின் மனம் எத்தனை விரோதமானது?    

இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நாட்களிலும், சத்துரு இந்த காரியத்தை திட்டமிட்டுச் செய்ததை நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றதே. மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தபோது, ஒருபுறம் நற்செய்தியாக இயேசு கிறிஸ்து பிறந்திருக்க, 'பயப்படாதிருங்கள்| இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்' (லூக். 2:10,11) என்ற நற்செய்தி அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்க, மறுபுறத்திலோ ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான் (மத். 2:16) என்று வாசிக்கின்றோமே. ஒருபுறம் ஆனந்தத்தின் சத்தம், மறுபுறமோ அழுகையின் குரல். நற்செய்தி வரும் நாட்களில், துர்ச்செய்தியை உண்டாக்க சத்துரு எத்தனையாய் முயற்சிக்கிறான் என்பதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகின்றதல்லவா. 

அதுமாத்திரமல்ல, இயேசு கிறிஸ்து மரியாளின் கர்ப்பத்தில் இருந்தபோது, உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தபோது (லூக். 2:1), யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போகவேண்டியதாயிற்று (லூக். 2:4,5) என்றும், அதனைத் தொடர்ந்து, ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்| நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான் என்றும் (மத். 2:7,8), தொடர்ந்து, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்| ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றும் சொல்லுகின்றானே (மத். 2:13). இந்த வசனங்கள் நமக்குச் சொல்லும் செய்திகள் அனைத்தும் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை (லூக். 2:10), துக்கமான செய்தியாக மாற்ற சத்துரு எத்தனையாக முயற்சித்தான் என்பதைத்தானே வெளிக்காட்டுகின்றன.

தனியொரு மனிதனாக எகிப்து தேசத்திற்குக் கொண்டுபோகப்பட்டவன் யோசேப்பு (ஆதி. 39:1)  என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான் (ஆதி. 41:51) என்றே எகிப்திலிருந்த யோசேப்பைக் குறித்து வாசிக்கின்றோம்| ஆனால், தேவனோ, அவன் இருக்கும் இடத்திற்கு தகப்பனையும் மற்றும் தகப்பனுடைய குடும்பத்தையும் அழைத்துக்கொண்டுவந்தார். அதுவரை, பஞ்ச காலத்தில் எகிப்தின் மக்களை எப்படி காப்பாற்றுவது என்று சிந்தித்துகொண்டிருந்த யோசேப்பு, எகிப்தை காப்பாற்ற பார்வோனுக்கு ஆலோசனை கொடுத்துக்கொண்டிருந்த யோசேப்பு, தன் சகோதரர்களைக் கண்டதும், 'என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்| அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்| ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார் என்றும், பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்' என்றும் சொல்லுகின்றான் (ஆதி. 45:5,7). அது மாத்திரமல்ல, நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்து தேசம் முழுவதுக்கும் அதிபதியாக வைத்தார்| என்னிடத்தில் வாரும், தாமதிக்கவேண்டாம். நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம் (ஆதி. 45:9,10) என்றும் தன் சகோதரர்களிடத்தில் சொல்லியனுப்புகின்றான். யோசேப்பின் வாழ்க்கையில் தகப்பனுடைய வீட்டை விட்டுப் பிரிந்து வந்த துக்கமான செய்தி, நற்செய்தியாக மாறியதே! யோசேப்பு எகிப்திலே உயர்த்தப்பட்டிருந்த நாட்களில், யோசேப்பின் சகோதரர் வந்தார்கள் என்கிற சமாசாரம் பார்வோன் அரமனையில் பிரசித்தமானபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள் (ஆதி.  45:16) என்றே யோசேப்பின் குடும்பம் எகிப்திற்குச் சென்றபோது அங்கு கிடைத்த வரவேற்பைக் குறித்து வேதத்தில் வாசிக்கின்றோம் நாம். 

என்றபோதிலும், யோசேப்பின் மரணத்திற்குப் பின் அந்த சந்தோஷம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கவும் மறையவும் தொடங்கியது| யோசேப்பை அறியாத வேறொரு ராஜன் எகிப்தில் தோன்றினபோதோ, அது முற்றிலும் முடிவுக்கு வந்தது. இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்| தேசம் அவர்களால் நிறைந்தது (யாத். 1:7) என்ற செய்தியை, எகிப்திலே தோன்றிய யோசேப்பை அறியாத புதிய ராஜன் அறிந்தபோது, எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலைவாங்கினார்கள் என்றும், சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்| அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள் (யாத். 1:13,14) என்று வாசிக்கின்றோமே! தேவ ஜனத்தின் வாழ்க்கையைக் கசப்பாக்க இன்றைய நாட்களிலும் சத்துரு எடுக்கும் முயற்சிகள்தான் எத்தனை! எத்தனை!!

'இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள். அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகாதபடிக்கும், நாம் அவர்களைக்குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும்' (யாத். 1:10) என்றே சொல்லுகின்றான் புதிய ராஜன். 'நம்மிலும் ஏராளமானவர்கள்' என்ற கணிப்பும் கணக்கெடுப்பும் இஸ்ரவேல் ஜனங்களை அழித்துவிடவேண்டும் என்றே எகிப்தின் புதிய ராஜனைத் தூண்டியது. 'சத்துருவின் தொகையிடுதலுக்குப் பின்னால், தேவ ஜனத்தின் அழிவு திட்டமிடப்பட்டிருக்கின்றது' என்பது இதன் மூலம் நாம்; அறிந்துகொள்ளவேண்டிய செய்தியல்லவா! இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார்' என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டபோது (2சாமு. 24:1), சேனாதிபதியாகிய யோவாபின் வார்த்தைகளையும் கேளாமல், ராஜா என்ற ஸ்தானத்தில் தாவீது ஆணையிட்டபோது, அது ஜனங்களிடையே அழிவைத்தானே கொண்டுவந்தது. நான் இப்படிச் செய்ததினால் பெரிய பாவஞ்செய்தேன்| இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்| நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் (2 சாமு. 24:10) என்று தாவீதை புலம்பவும் செய்ததே. தாவீது செய்த அந்த பாவத்தினிமித்தம், கர்த்தர் கொள்ளைநோயை வரப்பண்ணினார்| அதினால் தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்களே! (2 சாமு. 24:15) 

பிரியமானவர்களே! இக்கடைசி காலத்தில், கடினமான நாட்களில், நற்செய்தியைச் சுமந்து செல்லும் நாம் இத்தகைய சத்துருவின் தந்திரங்களில் சிக்கிக்கொள்ளாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கவும், எவ்விதத்திலும் துர்ச்செய்திகளுக்கு இடங்கொடுத்துவிடாமல் தொடர்ந்து முன்னேறிச் செல்லவும்  கர்த்தர் உதவிசெய்வாராக| கிருபை உடனிருக்கட்டும்!  


தேவனுக்கேற்ற துக்கங்களைச் சுமப்பதே

தேவப் பணிக்கான ஓட்டத்தின் தொடக்கம்

அழைத்தவர் அழைப்பிலே அசையாது நிற்கவும்

அதுவே ஆரம்பம் அதுவே ஆரம்பம் 

நற்செய்தியைக் கூறும் மனிதர்களாம் நம்மை

துர்ச்செய்தியைக் கூறி சத்துரு எதிர்ப்பினும் - அவன்

சத்தத்திற்குச் செவியைக் சாய்க்காதிருந்துவிட்டால்

சத்தியத்திற்கே வெற்றி சத்தியத்திற்கே வெற்றி


மாம்சீகக் கண்களின் காட்சி - நம்மை 

துர்ச்செய்தியின் தூதர்களாகிவிடக்கூடாது 

உடனிருப்போர் உயர்த்தப்படும்போதும் - உள்ளத்தில்

பகை துளிர்விடக்கூடாது பகை துளிர்விடக்கூடாது


தலைமுறையை அழிக்கும் சத்துருவின் தந்திரம்

தரிசனம் உடையோரே அதை உடைக்கும் எந்திரம் 

இடைமறிக்கும் எதற்கும் விடையுண்டு அவரிடம்

தொடரட்டும் நம் பயணம் தொடரட்டும் நம் பயணம்


in His harvest

P.  J. கிருபாகரன்