June 2025

அன்பின் மடல்


கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,  

'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை" (மத். 16:18)என்று வாக்களித்தவரும், மூலைக்குத் தலைக்கல்லாகவும் (சங். 118:22) மற்றும் பிரதான மூலைக்கல்லாகவும்  (1 பேதுரு 2:7; எபே. 2:20) அறியப்பட்டவரும், பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் (சக. 4:7) என்றும், கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தி, அவாந்தரவெளியிலே தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுகின்ற ஜனங்களால், 'பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடு முரடானவைச் சமமாக்கப்படும்" (ஏசா 40:3,4) என்றும்  தலைக்கல்லைக் கொண்டுவரும் ஜனங்களைக் குறித்தும் மற்றும் அவர்கள் மூலமாக வெளிப்படவிருக்கும் வல்லமையைக் குறித்தும் முன்னுரைத்தவருமாகிய ஆண்டவரின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்!

பிரியமானவர்களே! அவரை மாத்திரம் தலைக்கல்லாகவும் மூலைக்கல்லாகவும் வைத்துவிட்டு அகன்றுபோய்விடுபவர்களாக அல்ல, 'மனுஷரால்தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்" (1பேதுரு 2:4,5) என்று நாமும் அவரோடுகூட இணைத்துக் கட்டப்படுவதனை பேதுருவின் மூலமாக அவர் நமக்கு எழுதித்தந்திருக்கின்றாரே!

'இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்" (யோவான் 2:19) என்று, ஆலயத்தை தன்னுடைய சரீரத்தோடு ஒப்பிட்டுப் பேசும் இயேசு கிறிஸ்து (யோவான் 2:21), பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன் என்றும், நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன் (யோவா 17:21,22) என்றும் தன்னோடு நம்மையும் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு எத்தனை நெகிழ்ச்சியானது! இதனையே,  அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம் (ரோமர் 12:5) என்று வாசிக்கின்றோம். சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார் (1கொரி. 12:12) என்று தலையாகிய கிறிஸ்துவை முன்னிறுத்தி, அவயவங்களாக நம்மை அவருடன் அடையாளப்படுத்தப்படும் பாக்கியம் பெற்றவர்கள் நாம் என்பதில் எத்தனை ஆனந்தம்! 

இச்சத்தியத்தினையே பவுலும், போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது என்றும், ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால் (1கொரி. 3:11,12) என்றும் பல்வேறு தரமும் மற்றும் தன்மையுமுடையவர்களாக இணைக்கப்படும் ஜனங்களைக் குறித்தும் குறிப்பிட்டு எழுதுகின்றார். அப்படியிருக்க, பிரியமானவர்களே! மூலைக்கல்லாகிய அவர் மீது கட்டப்பட்டுவரும் நமது தரம் தாழ்ந்துவிடக்கூடாதே! அது கட்டிடத்தைத் தகர்ந்துவிழச்செய்துவிடக்கூடாதே! ஒருவன் கட்டினது நிலைத்தால்... என்றும், ஒருவன் கட்டினது வெந்துபோனால்... என்றும், அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும் (1கொரி. 3:14,15) என்றும் பவுல் எழுதும் வரிகள், கட்டினவனின் கவலையீனத்தையும், அவன் ஆத்துமா கஷ்டப்பட்டுக் கரை சேர்த்ததையும்தானே சுட்டிக்காட்டுகின்றது. பிரியமானவர்களே! தரமற்ற மனிதர்கள் உட்புகுந்ததுதானே, அநேக சபைகளும் மற்றும் ஊழியங்களும் தாழ்த்தப்பட்டு, அஸ்திபாரத்துடன் மாத்திரமே தப்பி நிற்பதற்குக் காரணம். எனவே, அக்கினிப் பரீட்சையின்போது, அஸ்திபாரம் மட்டுமே மீந்திருக்கும் நிலை ஏற்பட்டுவிடாதபடி எச்சரிக்கையாயிருப்போம்.   

'இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை" (சங். 121:4) என்பதை அறிந்திருந்தபோதிலும்,  தலையாகிய அவர் விழித்திருக்கும்போதே, செயல்பட்டுக்கொண்டிருக்கும்போதே, தலைக்கல்லாகிய அவர் மீது தலைவைத்து ஆறுதலடைவதையும் மற்றும் இளைப்பாறுவதையுமே அங்கங்களாக இணைக்கப்பட்டிருக்கும் அநேகர் விரும்புவதினால், அங்கங்களின் ஆழ்ந்த உறக்கம் முழுச்சரீரத்தையும் அதாவது சபையையும் செயலற்றதாக்கிவிடப் போதுமானதல்லவா! அதுமாத்திரமல்ல, உறக்கம், மயக்கம், உணர்வற்ற நிலை என்ற படிப்படியான வீழ்பரிமாணங்களைத் தொடர்ந்து, தலையாகிய கிறிஸ்துவையே தலைவாசலுக்கு வெளியே தள்ளி, சரீரமாகிய முழுச்சபையையும் மரணத்திற்கு நேராகவும் வழிநடத்திவிடும் ஆபத்தும் தூரத்திலில்லை என்பதும் நமது காதுகளில் தொனிக்கவேண்டிய எச்சரிப்பின் செய்தியல்லவா!  

பிரியமானவர்களே! நம்முடைய ஆவிக்குரிய உறக்கம், தேவனை நம்மூலமாகச் செயலாற்றமுடியாதபடிச் செய்துவிடும். 'மனுர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது" என்று கேட்டபோது, 'சத்துரு அதைச் செய்தான்"  (மத் 13:25-28) என்று வாசிக்கின்றோமே! இன்றைய நாட்களில், இப்படிப்பட்ட நிலை சபைகளில் உண்டாகாமலில்லையோ? சபைகளுக்குள் காணப்படும் களைகளுக்குக் காரணம், கண்ணயர்ந்துத் தூங்கிவிட்ட காவலர்களாகிய மனுஷர்தானே! உறக்கம் சத்துருவை உள்ளே ஊடுருவச்செய்துவிட்டதே! 'மனுஷர் நித்திரைபண்ணுகையில்" என்ற வார்த்தைகள், சபையின் ஊழியர்களை மாத்திரமல்ல, சபையின் அங்கங்களாகிய ஒவ்வொரு மனு~ரையும் உள்ளடக்கியிருக்கின்றது என்பதையும் நம்மால் உணர்ந்துகொள்ளமுடிகின்றதல்லவா! 

மேலும், கண்ணயர்ந்ததினால் உட்புகுந்துவிட்ட களைகளை, வேலைக்காரர்களின் கைகளினால் அகற்றுவதும் வீட்டெஜமானுக்குக் கடினமாகிவிடுகின்றதே! 'வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்" (மத். 13:29) என்று வீட்டெஜமானால் வேலைக்காரர்கள் தடுக்கப்பட்டு, 'அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன்" (மத். 13:30) என்று வீட்டெஜமான் சொல்லுகிறதையும், அறுக்கிற பணிக்காக தேவதூதர்கள் நியமிக்கப்படுகிறதையும் (மத். 13:39) வேதத்தில் வாசிக்கின்றோமே. 

வேலைக்காரர்களுக்குப் பதிலாக, தேவதூதர்கள் நியமிக்கப்படுவதற்கான காரணம் என்ன? வேலைக்காரரிடத்தில் காணப்பட்ட வேறுபிரித்துப் பார்க்கும் திறனின் குறைபாடுதானே! அதனால்தானே, 'அவர்கள் களைகளைப் பிடுங்கும்போது, கோதுமையையுங்கூட பிடுங்கிவிடுவார்கள்" என்று எஜமான் பயப்படுகின்றார். அப்படியிருக்க, வேலிக்குள் சத்துரு வந்ததற்கும் மற்றும் அவனால் களைகள் விதைக்கப்பட்டதற்கும்கூட காரணம் இதுதான் என்பது இதன் மூலம் தெளிவாகின்றதல்லவா! 'வீட்டெஜமான் விதைத்த நல்ல விதைகளோடு, சத்துரு விதைத்த களைகளுக்கும் சேர்த்து வேலைக்காரர்கள் தண்ணீர் பாய்ச்சி, உரம் போட்டு வளர்த்தது" எத்தனை வேதனை? 'நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு" என்றும், 'என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள்" என்றும்,  'அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்குமுன்னே இருந்த "மூப்பரிடத்தில் துவக்கம் பண்ணினார்கள்" (எசே. 9:4,6) என்றும் எழுதப்பட்டிருப்பதற்கான கரணம் இதுதானோ? இதைத்தானே பேதுருவும், 'நீயாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?" (1பேதுரு 4:17,18) என்று எழுதுகிறார். அப்படியென்றால், 'சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்" தேவனுடைய வீட்டிலும் இருக்கின்றார்களோ?

எனவே, பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள் (1யோவான் 4:1)என்ற அப்போஸ்தலனாகிய யோவானின் ஆலோசனை சபைக்கு எத்தனை அவசியமான ஒன்று. 

அதுமாத்திரமல்ல, 'பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது, களைகளும் காணப்பட்டது" என்ற வார்த்தைகள், பயிர்கள் கதிர்விடும்வரை, அவர்களால் களைகளை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை என்பதைத்தானே வெளிப்படுத்துகின்றன. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது;  கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் (மத். 7:18,20) என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றாரே! மனுஷருடைய உறக்கத்தினால் உள்ளே நுழைந்துவிட்ட களைகள், மரங்களைப்போல உயர்ந்துவிட்ட நிலை சபைக்கு எத்தனை ஆபத்தானது? களைகளாய் சபைக்குள் நுழைந்து, முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு போன்றவர்கள், அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனவர்களைக்கூட ஏற்றுக்கொள்ளாமல், தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளிவிடுவார்களே! (3 யோவான் 7-10)

இன்றைய நாட்களிலும், கண்ணயர்ந்து, களைகளை சபைக்கு உள்ளே உலாவவிட்டு, பின்னர் அவைகளைக் களைய முற்பட்டு, இறுதியில் கோதுமை மணிகளையும் இழந்து நிற்கும் சபைகள் உண்டல்லவா! மனுஷரின் உறக்கம் மற்றும் விழித்திராமை, 'கடைசி வரை அதாவது நியாயத்தீர்ப்பு வரை அச்சபையினை கதிர்களையும் மற்றும் களைகளையும் உள்ளடக்கிய சபையாக" மாற்றிவிடுவது எத்தனை வேதனையானது? 'தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்" (1பேதுரு 5:8) என்ற எச்சரிப்புடன் சபையின் தூதர்களாகிய தலைவர்கள், மூப்பர்கள், மேய்ப்பர்கள் மற்றும் சபை மனிதர்கள் காணப்பட்டால், சபையில் தேவதூதர்களின் களையெடுக்கும் பணி அவசியமற்றதாகிவிடுமே! 

'எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும்; இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயதமணிந்தவனைப்போலவும் வரும்" (நீதி. 6:9-11) என்ற சாலொமோனின் வார்த்தைகள் நமக்கு எச்சரிக்கையாகத்தானே எழுதித்தரப்பட்டிருக்கின்றன. இன்றைய நாட்களில், 'ஆவிக்குரிய தரித்திரத்தையும், வறுமையையும்" அநேக சபைகள் அனுபவித்துக்கொண்டிருப்பதற்குக் காரணம் இதுதானே! 'நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லுகிறபடியால்; நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்" (வெளி. 3:17,18) என்று லவோதிக்கேயா சபைக்குச் சொல்லப்பட்டதைப்போலத்தானே, இத்தகைய சபைகளுக்கும் சொல்லப்படவேண்டும். 

பகட்டான கட்டிடம், வானளாவிய உயர்ந்த கோபுரம் மற்றும் வண்ண வண்ண மின்விளக்குகளுடனான அலங்கரிப்பு என வெளித்தோற்றத்தில் மிளிர்ந்துகொண்டிருக்கின்றபோதிலும், ஐசுவரியமான சபையைப்போலக் காட்சியளித்துக்கொண்டிருந்த போதிலும், பல சபைகளில் உள்ளிருப்போரின் நிலையோ உருக்குலைந்து காணப்படுகின்றதே! 'மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்" (மத். 23:27) என்ற நிலைதான் இப்படிப்பட்ட சபைகளுக்கும் பொருந்திப்போகிறதோ! 

இன்றைய நாட்களில், தன்னோடு இருப்பவரையும், தன்னுடைய பெலத்தையும் மற்றும் தான் பண்ணவேண்டிய பிரயாணத்தின் தூரத்தையும் அறிந்துகொள்ளாததே அநேக சபைகளைப் பெலவீனப்படுத்தியும் மற்றும் பயப்படுத்தியும் வைத்திருக்கிறது. யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களின் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால் தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னபோது, எலியா வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம்போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான் என்றும், ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்று சொல்லி, தழலில் சுடப்பட்ட அடையையும், பாத்திரத்தில் தண்ணீரையும் அவனது தலைமாட்டில் கொண்டுவந்து வைத்தபோதிலும், அவன், புசித்துக் குடித்துத் திரும்பப்படுத்துக்கொண்டான் (1இராஜா. 19:2,4,5,6) என்றும் வாசிக்கின்றோமே! 

இன்றைய நாட்களில், அநேக சபைகளின் நிலை இப்படிக் காணப்படவில்லையோ? உறங்கிக்கொண்டிருக்கும் சபைகளை தட்டியெழுப்பவும், அவைகளுக்கு முன், 'அப்பத்தையும், தண்ணீரையும்" வைத்து, சபையே, 'நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்" (1இராஜா. 19:7) என்று அவைகளைச் செயல்படச்செய்யவும், அநேக ஊழியர்களை சபைகளுக்கு தேவன் அனுப்பிக்கொண்டேயிருக்கின்றபோதிலும், 'கூட்டங்கள் நடைபெறும்போது மாத்திரம், கரங்களைத் தட்டி, அந்நியபாஷைகளைப் பேசி, ஆவியில் நிறைந்து, ஆர்ப்பரித்து, ஆவிக்குரிய ஆகாரங்களைப் புசித்துக் குடித்து, திரும்பவும் படுத்துக்கொள்ளுகிறது சபை". 

மேலும், 'சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்" என்று தங்களது பழைய அனுபவத்தையே பேசிக்கொண்டும், 'நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள்" (1இராஜா. 19:10) என்று தங்கள் தற்கால பயத்தையும் கூடவே வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கின்ற சபைகள் எத்தனை! எத்தனை!! 'பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்" (1இராஜா. 19:18) என்று தேவன் சொன்னபோதிலும், 'அந்த ஏழாயிரம் பேரோடுகூட நானும் இஸ்ரவேலிலே இருப்பேன்" என்றும், அவர்களோடு இணைந்து நானும் இஸ்ரவேலின் தேவனுக்காகச் செயல்படுவேன் என்றும் தனக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொள்வதற்குப் பதிலாக, தனக்கு மாற்றான ஏர் பூட்டி உழுத எலிசாவைத்தானே உடனே தேடிச்சென்றான் எலியா! எலியா மரிப்பதை தேவன் விரும்பாததினால்தான், அவனை சுழல்காற்றிலே எடுத்துக்கொண்டாரோ? அவ்வாறே சபையின் மரணத்தையும் விரும்பாததினாலேயே, சபையையும் எடுத்துக்கொள்ளவிருக்கின்றாரோ?

ஆயிரமாயிரமாய் ஜனங்கள் நரகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்க, 'தங்களுடைய ஆவியின் அனுபவங்களிலும், ஆசீர்வாதங்களிலும்" திளைத்தவர்களாக இருந்த இடத்திலேயே இருந்துவிட நினைக்கும் சபையை நோக்கி, 'இங்கே உனக்கு என்ன காரியம்" (1இராஜா. 19:9) என்ற சத்தம் இன்றைய நாட்களில் தொனிக்கட்டும். அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா? தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத். 12:5,6) என்ற சத்தியத்தை இன்றைய நாட்களில் சபைகள் புரிந்துகொள்ளட்டும்.

பாலசிங்கத்தை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டவன் சிம்சோன் (நியா. 14:6), முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி, பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தரின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சத் தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் சுட்டெரித்துப் போட்டவன் (நியா. 15:4,5), பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பேர்த்து, தன் தோளின் மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்துகொண்டுபோனவன் அவன் (நியா. 16:3); என்றபோதிலும், தவறான இடத்தில் அவன் தலைவைத்து நித்திரைசெய்ததினால், அவனது தலை (பெலன்) சிரைக்கப்பட்டுப்போயிற்றே! (நியா. 16:19). தவறானவர்களின் உறவினாலேயே, அவர்களது குடையின் கீழ் சபை நித்திரைசெய்வதினாலேயே இன்றைய நாட்களில் அநேக சபைகளில் 'தலை (பெலன்) சிரைக்கப்பட்டுவிட்டது"; அதாவது தலையாகிய பெலனாகிய கிறிஸ்து அகற்றப்பட்டுவிட்டார் என்பது நாம் அறிந்துகொள்ளவேண்டிய செய்தியல்லவா! சிம்சோனின் உயிர் மீது அல்ல, அவனுக்கும் தேவனுக்கும் இடையிலான உடன்படிக்கையின் மீதல்லவா முதலில் கத்தி வைக்கப்பட்டது! பெலமுள்ள சபையை 'மற்ற மனுஷரைப் போல ஆக்க" சத்துரு எடுக்கும் முயற்சிக்கு சபையே எச்சரிக்கையாயிருக்கவேண்டுமே!!

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் (2பேதுரு 3:9) என்பதை சபை எண்ணினால், ஆத்தும ஆதாயப் பணியில் அல்லவோ அது தீவிரப்படவேண்டும்; மாறாக, 'மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்" (மத். 25:5) என்ற நிலைக்கு சபை தள்ளப்பட்டுவிடாதபடிக்கு கர்த்தர் நம்மைக் காப்பாராக; கிருபை உடனிருக்கட்டும்! 


காக்கும் மனுஷர் நித்திரை செய்ததினால்

களைகளைச் சத்துரு விதைத்துவிட்டானே!

வேறுபிரிக்கும் திறனும் இல்லாதே போனதினால் 

வேலிக்குள்ளும் களைகள் விதைகளாய் வந்துவிட்டதே!


கண்ணயர்ந்து சபை தூங்கியே போனதினால்

கண்ணெதிரே களைகளும் மரமாக மாறிற்றே!

விழித்திராமல் சபை நித்திரை செய்ததினால்

வறுமையும் தரித்திரமும் விருந்தாளிகள் ஆயிற்றே!


தரமற்ற மனிதர் திரளா யுட்புகுந்ததினால்

தரைமட்டும் கட்டியவைகளும் தகர்ந்தே போயிற்றே!

தகிக்கும் தீயொருநாள் தாங்காது போய்விட்டால்

தப்பி நிற்கும் மீதமாய் அஸ்திபாரம் மாத்திரமே!


வருகை இன்னும் தாமதிப்பதின் காரணம்

விளக்கை அணைத்து நாம் தூங்குவதற்கல்ல

பிரயாணம் இன்னும் வெகு தூ......ரமிருக்க

படுத்திருந்து நித்திரை செய்வது நியாயமுமல்ல

                                                                            அன்பரின் அறுவடைப் பணியில்

                                                                                   P. J. கிருபாகரன்